துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



திருச்சி பச்சைமலை அருகே வயல்வெளியில் மருத்துவமனை கட்ட மலைவாழ் மக்கள் எதிர்ப்பு



திருச்சி மாவட்டம் , துறையூர் வட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்டபட்ட தாளூர் கிராம மலைவாழ் மக்கள் அப்பகுதி வயல்வெளியில் மருத்துவமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்டபட்ட தாளூர் கிராம மலைவாழ் மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் தாளூர் கிராமம் , செம்புளிச்சான்பட்டி - மணலோடை பிரிவு சாலையில் உள்ள நிலப்பகுதியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றோம், வறட்சி மிகுந்த இந்த நிலப்பகுதியில் மரவள்ளிகிழங்கு , முந்திரி போன்ற பயிர்களை பயிரிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறோம்.

இந்நிலையில் முசிறி வருவாய் கோட்டச்சியர், துறையூர் வட்டாச்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் உட்பட பல அரசு அதிகாரிகள் வருகை தந்து நிலப்பகுதியை அளவிடு செய்து அப்பகுதியில், புதிதாக மருத்துவமனை கட்டவிருப்பதாகவும், விவசாயிகளான நாங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறி சென்றனர்.

அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை எங்களுக்கு பேரதிர்ச்சியையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலப்பகுதியில் தாளூர் கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறோம்.மேலும் சுமார் 50 வருடங்களாக அந்த பகுதிக்கு நாங்கள் வரி செலுத்தி விவசாயம் மட்டுமே செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தை சுற்றி சுமார் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள நிலையில் புதிதாக மருத்துவமணை கட்ட வேண்டிய தேவையே இல்லை.

தாளூர் கிராமத்திற்கு அருகில் 1 கிமீ சுற்றளவில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அங்கு மருத்துவரோ , செவிலியரோ வராமல் எவ்வித பராமரிப்புமின்றி பாழடைந்து கிடக்கிறது. அவற்றை சீர்படுத்தி , மேம்படுத்தி செயல்பட வைத்தாலே எங்களுக்கு பெருத்த உதவியாக இருக்கும். மேலும் புதிதாக மருத்துவமனை கட்டிதான் ஆகவேண்டும் எனில் எங்கள் மலைப்பகுதிகளில் பல இடங்களில் தரிசு நிலங்கள் உள்ளன , அதையெல்லாம் விடுத்து பல வருடங்களாக முறையாக வரி செலுத்தி விவசாயம் செய்து வரும் எங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பது ஏற்புடையதல்ல எனறும், நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறுதெரிவித்துள்ளனர்.